சர்வதேச அளவில் தற்போது பெரும் சவாலாக இருப்பது காலநிலை மாற்றம். இதனை சரிசெய்ய உலக தலைவர்கள் பெரியளவில் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் அதற்கு சாத்தியம் மிகக்குறைவு என கருதப்படுகிறது.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து கனடாவின் கூட்டேனே லேக் மருத்துவமனையின் டாக்டர் கைல் மெரிட் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த பெண்மணியின் உடல்நிலை கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.அவரது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க அவர் கடுமையாக போராட வேண்டியுள்ளது, என்றார்.
இந்த ஆண்டு கனடாவிலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பதிவான வெப்ப அலைகள் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன . பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தால் மட்டும் 233 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கில் உள்ள உயர் வெப்ப அழுத்தத்தாலும் மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தாலும் இவ்வாறு நிகழ்வதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.