• Wed. Apr 23rd, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ByT.Vasanthkumar

Jan 31, 2025

பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் இன்று (31.01.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாய சங்கத்தலைவர்கள் ராமராஜன் மக்காச்சோள பயிரில் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்கவேண்டும் எனவும், மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தெரு நாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். விசுவக்குடி நீர்த்தேக்கம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து உள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ராஜீ விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம் விதை விதைக்கும் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கை.களத்தூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். விசுவநாதன் மழையால் பாதிப்படைந்த சின்ன வெங்காயம், மரவள்ளி போன்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், விவசாயிகள் வட்டித்தொகையை நிர்ணயித்த காலத்திற்குள் கட்டுவதற்கு முன் கூட்டியே தெரிவித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். ரகு பாடாலூர் பகுதியில் குவாரிகள் அதிகம் உள்ளதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மணிவண்ணன் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். விநாயகம் தெரணியில் உள்ள மயான பகுதியை சீர்செய்திட வேண்டுமெனவும், இலவச வேட்டி மற்றும் சேலைகள் விடுபாடின்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். ராஜா போலிப்பத்திரப்பதிவு நடைபெறுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தெரணியில் ஏரிக்கு வரும் வரத்துவாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். நீலகண்டன் அரும்பாவூர் பெரியஏரி உடைப்பை சீரமைக்க வேண்டுமெனவும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி கொள்முதல் பணிகளில் எடை மோசடியை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.ராஜாசிதம்பரம் மழையினால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ரமேஷ் பெரம்பலூரில் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கேட்டுக் கொண்டார். கண்ணபிரான் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்மென கேட்டுக்கொண்டார். ஜெயராமன் விவசாய அறுவடை காலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த சார் ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடுநிலைமையுடன் பதில் அளிக்க வேண்டுமெனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் மக்காச்சோள அறுவடை நடைபெற்று வரும் இச்சமயத்தில் NAFED மூலம் கொள்முதல் மற்றும் விலை சம்மந்தமாக வேளாண் வணிகத்துறை மூலம் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றும், மாவட்டத்தில் உள்ள எடை மேடைகளை ஆய்வு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவித்த 8 டன் சின்ன வெங்காயத்தை விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு அனுப்பியதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலுக்கிணங்க சார் ஆட்சியர் மேற்கொண்ட சீரிய முயற்சியை பராட்டி விவசாயிகள் சார் ஆட்சியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியினை சார் ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே.) பொ.ராணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சத்யா மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொது தகவல்கள்:
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 ஜனவரி மாதம் பெய்ய வேண்டிய மழையளவு16 மி.மீ., பெய்த மழையளவு11.55மி.மீ, ஆகும். 2025 ஜனவரி மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 16மி.மீ., பெய்த மழையளவு 11.55மி.மீ, ஆகும். விதைகொள்முதலை பொறுத்த வரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 12.619 மெ.டன்களும், சிறுதானியங்களில் 5.162 மெ.டன்களும், பயறு வகைகளில் 7.500மெ.டன்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 11.359 மெ.டன்களும், இருப்பில் உள்ளது.
தோட்டக்கலைதுறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான்குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண்பொறியியல்துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர் வாருதல், மின்மோட்டார் மாற்றிக்கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.