தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58-ம் கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவை சேர்ந்த உத்தப்ப நாயக்கனூர், லிங்கப்பநாயக்கனூர், பாப்பாபட்டி, பசு காரன்பட்டி ,நாட்டா பட்டி ,நடுப்பட்டி .சொக்கத்தேவன் பட்டி, சின்ன குறவ குடி பெரிய குறவகுடி, அய்யனார் குளம் உள்ளிட்ட 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி வரும் வகையில் வைகை அணையில் நீர்த்தேக்க பகுதியில் மேற்கு புறமாக மதகுகள் அமைக்கப்பட்டு ,அங்கிருந்து உசிலம்பட்டி வரை 33 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு முறை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியதும் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கடந்த இரண்டு மாதமாக பரவலாக மழை பெய்து, அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 70 அடி எட்டி உள்ளது. எனவே 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.