ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கே வராமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தங்கியுள்ளதற்கான காரணம் நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.
இன்று சட்டப்பேரவை கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என, அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அப்போது தலையிட்ட சபாநாயகர் அப்பாவு, ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன் என தெரிவித்தார். ஆனால், மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததையடுத்து, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்ட படியே சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது தமிழக மக்கள் மற்றும் ஓட்டுமொத்த ஊடகங்களின் கவனமும் அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின் மீது தான் குவிந்துள்ளது. இதனால் தான் இன்று பேரவைக்கே வராவிட்டாலும், உஷாரான சி.வி.சண்முகம் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே தனியாக தர்ணாவில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். இன்று பேரவையில் இப்படியொரு சம்பவம் அரங்கேறப்போகிறது என்பது அதிமுக தரப்பினர் அறிந்த விஷயமே. அப்படியிருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கே என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விசாரித்ததில் எடப்பாடியார் கடந்த 4 நாட்களாகவே சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தான் இருக்கிறாராம். கொடநாடு விவகாரத்தில் திமுக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது, எப்படியாவது எடப்பாடியாரை கைது செய்தே தீர வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். எனவே கொடநாடு வழக்கு தொடர்பாக நெருக்கமானவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அதனால் தான் இன்றைக்கு இப்படியொரு பூகம்பத்தை பேரவையில் அதிமுகவினர் கிளப்ப போகிறார்கள் என்பது தெரிந்தும், எடப்பாடியார் வரவில்லை எனக்கூறப்படுகிறது. அது சரி.. தலைக்கு மேல் தொங்கும் கத்தியில் இருந்து தப்பிப்பது பற்றி தான் முதல் யோசிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.