சசிகலா அரசியல்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் .இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவை மீட்கப் போவதாகக் கூறி வி.கே.சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், அவரது சகோதரர் திவாகரனும் தனது கட்சியை சசிகலாவுடன் இணைத்துக்கொண்டார்.இந்நிலையில், சென்னை அசோக் நகர் இல்லத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து, அவருடைய உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது; “அதிமுகவின் மூத்த அரசியல் தலைவர் என்பதால் பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன். அரசியல் விஷயம் பற்றியும் கலந்து பேசிக் கொண்டோம். என்னைப் பொறுத்தவரை, அதிமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் இருக்கிறது.அதனால், அதிமுக என்பது எல்லோரையும் ஒன்றாக இணைக்கும் இயக்கம். அதனடிப்படையில் தான் என்னுடைய ஒவ்வொரு நகர்வும் இருக்கும்.எல்லோரையும் ஒன்றிணைத்து செல்லக் கூடியதுதான் அதிமுகவின் பண்பாடு. எங்கள் தலைவர் அந்த வழியை தான் எங்களுக்கு காண்பித்திருக்கிறார். அந்த வழியில்தான் நான் எடுத்துச் செல்வேன்.கட்சி ஒரு நிறுவனம் அல்ல; இது எல்லோருக்குமான இயக்கம். அதை நிலை நிறுத்துவது தான் என்னுடைய கடமை. அதை நான் நிச்சயமாக செய்வேன். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை” என்றார்.