இலங்கைக்கு முதல் கட்டமாக ரூ123கோடி மதிப்புள்ள பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
இலங்கையில் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளது. நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பார்சலில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு மீண்டும் 22-ந்தேதி 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.