• Wed. Dec 11th, 2024

பொதுக்குழு என்ற பெயரில் நாடகம் நடத்தினார் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு!!!

ByA.Tamilselvan

Aug 28, 2022

பொதுக்குழு என்ற பெயரில் இபிஎஸ் நாடகம் நடத்தியதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பேட்டி அளித்தார். அப்போது அவர் …:
அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தொண்டர்கள் ஆதரவும், பொதுமக்கள் ஆதரவும் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது. எம்ஜிஆர் மறைந்தபோது அம்மா அணி, ஜானகி அம்மா என இரண்டு பிரிவுகளாக தேர்தலை சந்தித்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர். அதேபோல் இன்றைக்கும் அனைவரும் ஒற்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்து வலுவாக உள்ளது.
தொண்டர்கள் அனைவரும் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கடந்த 11ந் தேதி பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் (எடப்பாடி பழனிசாமி தரப்பினர்) நாடகம் நடத்தினர். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சசிகலா, டிடிவி தினரகரனை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா? என்று செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என குறிப்பிட்டார். முன்னதாக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.