பிரதமர் மோடி,அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணத்தில் திட்டமிட்டிருந்த இபிஎஸ் திடீரென
பாதியிலேயே சென்னை திரும்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அழைத்தது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்துகொண்டார்.இதனையடுத்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். அதாவது நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.
இந்த சந்திப்பின் போது அதிமுக உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் ஆகியவற்றை எடுத்து விளக்கமாக கூறி டெல்லி பாஜகவின் ஆதரவையும் பெற்றுவிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனது பயண திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடி, அமித்ஷா இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே திரும்புகிறார். அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.