திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் அதிக கூட்டத்தைப் பயன்படுத்தி, கோவில் ஊழியர்கள் லட்டுகளை திருடி அதிக விலைக்கு விற்ற புகாரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே இதைப் பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தேவஸ்தான ஊழியர்கள் மூலம் லட்டுகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் விற்பனை கவுண்டர்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளைத் திருடி விற்பனை செய்வதாகத் தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் வந்தது. அதன்பேரில் தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் லட்டுகளை எடுத்துச் செல்லும் பணியைக் கண்காணித்து வந்தனர். அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்த 750 லட்டுகளைத் திருடி எடுத்துச் சென்றனர். அவர்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, இதுவரை 35 ஆயிரம் லட்டுகளைத் திருடிக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. பிடிபட்ட தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரும் திருமலை 2-நகர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.