• Sun. Feb 9th, 2025

டி 20 கிரிக்கெட்… சாதனை மேல் சாதனை படைத்த அபிஷேக் சர்மா

ByIyamadurai

Feb 3, 2025

மும்பையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 24 வயது வீரான அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடேவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இமாலய இலக்கை நோக்கி துரத்திய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசிய அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அவுட்டானார். அவர் அடித்த 135 ரன்களில் 13 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். இது அபிஷேக் சர்மாவின் 2வது சதமாகும்.

இந்த போட்டியில் மொத்தம் 13 சிக்சர்களை பறக்க விட்ட அபிஷேக் சர்மா, ஒரே டி20 போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரே போட்டியில் 10 சிக்சர்கள் அடித்திருந்தனர். இது மட்டுமின்றி இந்த போட்டியில் 135 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, டி20 போட்டியில் தனிநபர் அதிகப்பட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார். மேலும் அதிவேகமாக இரண்டு சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் பக்கம் சென்றது.

மேலும் டாப் 10 பட்டியலில் இருக்கும் அணிகளில் 2வது அதிவேக டி20 சதத்தையும் அபிஷேக் சர்மா பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) 95 ரன்கள் எடுத்தது. இது பவர்பிளேயில் இந்திய அணி எடுத்த அதிகப்பட்ச ரன்களாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேயில் 82 ரன்கள் அடித்திருந்தது. மேலும் இந்த போட்டியில் 247 ரன்கள் குவித்த இந்திய அணி, வான்கடே மைதானத்தில் அதிகப்பட்ச ரன்களையும் பதிவு செய்தது.