குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 1500 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்து போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர்கிரைம் போலீசாரால் கண்டிபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
செல்போன்களை ஒப்படைத்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறும் போது, இதுவரையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 543 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 77 தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020 ஆண்டை விட 2021 ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33 கொலை வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 25 சதவீதம் வழக்கு குறைந்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மது அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பெற்றோர்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்காக தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடும் படியும் கேட்டுக்கொண்டார்.