• Mon. Dec 9th, 2024

*பெட்ரோல், டீசலில் சம்பாதித்ததை மாநிலங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும் – மம்தா பானர்ஜி *

Byமதி

Nov 10, 2021

பெட்ரோல், டீசலால் சம்பாதித்த ரூ.4 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு சமமாக பங்கிட்டு தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார

சமீபத்தில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தநிலையில், மேற்கு வங்காளம் போன்ற சில மாநிலங்கள் தங்களது ‘வாட்’ வரியை குறைக்கவில்லை. அந்த வரியை குறைக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு பா.ஜனதா ஒரு வாரம் ‘கெடு’ விதித்துள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதை மனதில் வைத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் விலையை குறைக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தி விடுகிறார்கள்.

‘வாட்’ வரியை குறைக்குமாறு எங்களுக்கு உபதேசம் செய்பவர்கள், மாநில அரசுகளுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று சொல்ல தயாரா? கடுமையான நிதி தட்டுப்பாட்டையும் மீறி, மாநில அரசு பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது. சமீப காலத்தில், கலால் வரியை உயர்த்தி, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றதால், மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இப்போது, மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று சொல்கிறது.

ஆனால், மாநிலங்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? ஆகவே, அந்த ரூ.4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமாக பங்கிட்டு தர வேண்டும் என்று அவர் கூறினார்.