• Fri. Apr 18th, 2025

திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. -குருமூர்த்தி பேச்சு

ByA.Tamilselvan

May 9, 2022

ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல் ,திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை என துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி திமுக அரசை கிண்டல் செய்து பேசியுள்ளார்
’துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, “திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் பேசுகிறார். கேட்டால் அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனக் கூறுகிறார். இதைத்தானே பிரதமர் மோடி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று பேச்சு. இந்த பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை.
திராவிட மாடல் வளர்ச்சியை பெரியார் காலத்திலிருந்து பார்ப்போம். தமிழும் பரம்பொருளும் பிரிக்கமுடியாது, தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கமுடியாது என்பது பெரியாருக்கு தெரியும். அதனால்தான் அவர் தமிழை தூக்கிப் பிடிக்கவில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றார். அடுத்துவந்த அண்ணா இந்தி எதிர்ப்பை கையில் எடுத்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் முதலில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார். ஆனால் அதே அண்ணாவை இந்தி திணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வைத்தார்.
ஸ்டாலினுக்கு நான் சவால் விடுகிறேன். இதையெல்லாம் அவரால் எதிர்த்துப் பேச முடியுமா என்று பார்ப்போம். கருணாநிதி திறமைமிகு அரசியல்வாதி. அவரால் நல்லதும் செய்ய முடியும். கெட்டதும் செய்ய முடியும். மாநிலத்தில் சுயாட்சி என்றார். அதாவது சுய குடும்ப ஆட்சியைக் குறிப்பிட்டார். மத்தியில் கூட்டாட்சி என்றார். அதாவது சோனியா காந்தி குடும்பத்துடன் கூட்டாட்சியைக் குறிப்பிட்டார்.
அடுத்ததாக நம்ம ஸ்டாலினின் திராவிட மாடல். அவர் மாநிலத்தில் நலத்திட்டங்கள் வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். 7.5% இட ஒதுக்கீடு வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறார். இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி கொண்டு செல்லப்படும் எனக் கூறிவிட்டு துபாய் சென்றுவிட்டார். துபாயில் லூலூ மாலின் உரிமையாளர் யூசுப் அலியுடன் ஒப்பந்தம் போடுகிறார். முதல்வருடன் அதிகாரிகள் செல்லவில்லை. ஆடிட்டர்கள் சென்றனர். ஆடிட்டர்கள் எதற்குச் செல்வார்கள் என்று எனக்குத் தெரியாதா?
ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அவரை யாரும் புகழ்ந்து பேசக் கூடாது. அவரை அவர் மட்டுமே புகழ்ந்து பேசிக் கொள்கிறார். நம்பர் 1 முதல்வர் எனக் கூறுகிறார். உழைப்பின் அடையாளம் எனப் பேசுகிறார். இப்படியாக குடும்ப ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது திமுக. திராவிட மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி.என்று குருமூர்த்தி பேசினார்.