

கூட்டணி தர்மத்தை மீறி, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியதால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. கவுன்சிலர் பதவிக்காக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,-19, அ.தி.மு.க., -7. காங்கிரஸ்-2, அ.ம.மு.க.,- 2, பா.ஜ.க., ஒன்னு, , சுயேட்சை இரண்டு என மொத்தம் 33 இடங்களை பிடித்தது. தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், தி.மு.க.,- காங்., இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கிடையில் 22வது வார்டு காங்., கவுன்சிலர் சற்குணம், கட்சி மேலிட செல்வாக்கை பயன்படுத்தி தலைவர் ‘சீட்டை’ ஓகே செய்தார். இத்தகவல் தி.மு.க., வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு இடங்களை மட்டுமே பிடித்த கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு எப்படி தலைவர் ‘சீட்’ டை தாரை வார்த்து கொடுக்க முடியும் என ஒட்டு மொத்த தேனி நகர தி.மு.க., வினரும் கொதித்தெழுந்தனர்.
இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், இன்று (பிப்.4) காலை 9:30 மணிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக மேல்தளத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் துவங்கியது. முதலில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க., வை சேர்ந்த ரேணுப்பிரியா பாலமுருகன், காங்கிரசை சேர்ந்த சற்குணம் ஆகியோர் விருப்ப மனு பெற்றனர்.
இவர்களில், ரேணுப்பிரியா பாலமுருகன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் அறிவித்தார். கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இச்செயலால், சற்குணம் செய்வதறியாது திகைத்து போய் கூட்ட அரங்கை விட்டு உடனே வெளியேறினார். தலைவர் பதவி கை மாறி போனதை அறிந்த காங்., தொண்டர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக தேனி- பெரியகுளம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர். இதனால் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் சூடுபிடித்ததை காணமுடிந்தது.
அதனை தொடர்ந்து, மதியம் 2:30 மணிக்கு நடந்த துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., கவுன்சிலர் வக்கீல் செல்வம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரும் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த வெற்றி மூலம் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ‘சீட்’ டை முதல் பெண் தலைவர் என்ற கம்பீரத்தோடு அலங்கரிக்க காத்திருக்கிறார், ரேணுப்பிரியா பாலமுருகன். இவரது மகத்தான பணி சிறக்க நாமும் வாழ்த்துவோமாக…..
