சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜரானார்.
திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு, வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ.13.7 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் ரோடு அமலாக்கத்துறை மண்டல அலுவலகதத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகி உள்ளார்.
அவருடன் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் விசாரணைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் துரைமுருகனின் சொத்து மதிப்புகள், கதிர் ஆனந்தின் சொத்து மதிப்புகள், தற்போது கைப்பற்றப்பட்ட 13 கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் குறித்து விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது.