திமுக வுடன் வைத்த கூட்டணி காரணமாக காங்கிரஸ் வளர்ச்சிபாதிக்கப்பட்டுதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை சோனியா காந்தி மற்றும் குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் தி.மு.க. தரப்பிலும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தனர். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் சிதைத்தது இல்லை. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.
தமிழக காங்கிரசுக்கு நான் தலைவரான பிறகு பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தது உண்டு. ஆனால் அதை நான் ஊக்கப்படுத்தியது இல்லை. அதனால்தான் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72 சதவீத வெற்றி கிடைத்தது.
கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன.
கூட்டணி என்பது கட்சியை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை.
காங்கிரசின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இலக்கு நிர்ணயிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகுதான் காங்கிரசை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைப்பார்கள்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
தி.மு.க. கூட்டணியால் காங்கிரஸ் வளர்ச்சி பாதிப்பு – கே.எஸ்.அழகிரி பேட்டி
