

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த நிலையில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஒருவருக்கு நான்கு, ஐந்து ஆதார் கார்டுகள் உள்ளன. போலி ஆதார் கார்டுகள் ஏராளமாக பிடிபட்டுள்ளன. ஆதார் எண்ணை இணைப்பது மேலும் குளறுபடிகளுக்கு வழிவகுக்கும். தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள 12 அடையாள அட்டைகளை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம். வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனை பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் இரட்டை பதிவுகளை நீக்கிவிட்டு அதை சீரமைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் குளறுபடியால் தான் வாக்குச்சாவடிகளில் பிரச்சினை ஏற்படுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைகிறது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வாக்காளர் பட்டியலை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
