

நியாய விலை கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்பட அனுமதி வழங்கி, அதற்கான பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கு சேலம் மாவட்ட நியாய விலை கடை தொமுச நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட நியாய விலை கடை தொமுச நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
நியாய விலை கடை தொமுச மாநில பொது செயலாளர் பொன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இரு வேறு துறையின் கீழ் செயல்பட்டு வந்த நியாய விலை கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்பட அனுமதி வழங்கி, அதற்கான பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று கூட்டுறவு வங்கிகளில் நகை வைத்திருப்பவர்களுக்கு நகை கடன்களை தள்ளுபடி செய்ததற்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சேலம் மாவட்ட தொமுச பொது செயலாளர் மணி, தொமுச கவுன்சில் தலைவர் பொன்னி பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
