13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் – ஏராளமானோர் பங்கேற்பு.
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் நடத்துனர்கள் வார ஓய்வு விடுப்பு வழங்க வேண்டும், மண்டலங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொதுமேலாளர்களுக்கே வழங்க வேண்டும், அதிகாரிகள் இடமாறுதல், பதவி உயர்வு, தண்டனை உள்ளிட்ட பணிகளில் பணம் பறிமாற்றத்தை தடுக்க வேண்டும், தொழிலாளர்கள் மீதான அதீதமான தண்டனைகள் கைவிடப்பட வேண்டும், பழைய பேருந்துகளை பராமரிப்பு செய்ய தேவையான, தரமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோதமாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது போக்குவரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவித்துவைக்கப்பட்டிருந்தனர்.