சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பு செயலாளரும் அனைத்து கிறிஸ்துவ மக்கள் கள தலைவருமாகிய எஸ்.செபாஸ்டியன் சூசைராஜ் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நல கட்சி ஆண்டனி, அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் கெல்வின் வின்சென்ட் மற்றும் தோழமை கிறிஸ்துவ அமைப்புகள் கலந்து கோரிக்கை உரையாற்றினார்கள். சாரள் முன்னிலை வகித்தார். ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். குளோரி, ஜான்சன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மதுரை ராம்நாட் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்கு மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள் முதியவர்கள் ஆகியோரை பாதுகாத்து வளப்படுத்த வழங்கப்பட்ட சுமார் 70 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்த சிஎஸ்ஐ பேராயர் ஜோசப்பை கைது செய்து பணத்தை திரும்ப திரு மண்டலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் காணிக்கை பணத்தில் கட்டிய மதுரை சிஎஸ்ஐ டென்டல் கல்லூரியை 9.33 கோடிக்கு அடமானம் வைத்ததற்கு ஜோசப்பை கைது செய்ய வேண்டும். மிகப்பழமை வாய்ந்த ஆங்கிலிக்கன் தேவாலயமாகிய புனித ஜார்ஜ் தேவாலயத்தை மதுரை ராம் நாட் திருச்சபை பேராயருக்கு போலி ஆவணம் தயாரித்து தாரைவார்க்க நினைக்கும் ஆர்தர் ஆசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஏற்கனவே தாரைவார்த்துக் கொடுத்த அபிஷேகநாதர் ஆலயத்தையும் தூய பேதுரு ஆலயத்தையும் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.