• Tue. Dec 10th, 2024

தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது போயஸ் கார்டன் இல்லம்

Byமதி

Dec 10, 2021

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களான தீபா, தீபக் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர்.

அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று கூறியதுடன், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கைக்கு, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று ஒப்படைத்தார்.