சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், சமூக வலைதள மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்து காவல்நிலையம் சென்றுவந்துள்ளார். இவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது என்றும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று அந்த விளம்பரத்தை வெளியிட்டு இருந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ரூ.1 லட்சம் கொடுத்தால் அந்த வேலை உறுதி என் தெரிவித்தார்கள். உடனே அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்திவிட்டு, குறிப்பிட்ட கப்பல் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முக தேர்வு நடத்தினார்கள். அதிலும் கலந்து கொண்டேன்.ஆனால் அந்த கப்பல் வேலை கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதுபோல 43 பேர் இந்த வேலைக்கு விண்ணப்பித்து ரூ.48 லட்சத்தை இழந்து விட்டோம். இது தொடர்பாக அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன் விளம்பரங்களை பார்த்து இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கூறுகின்றனர். கப்பலில் வேலை என்ற ஆசை வார்த்தையால் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி பட்ட துயரத்தை பார்த்துமா இன்னும் திருந்தவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.