கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வல்லன்குமாரவிளை பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 449 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் என இரு மாணவர்களுக்கும் இரு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து, 3 நாட்களுக்கு பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலஞ்சி பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அப்பள்ளியில் சக மாணவர்களான 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு அரசு பள்ளிகளில் 3 மாணவர்கள் மற்றும் இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.