மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோனார் வீதி பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் அதே பகுதியில் வசித்துவந்த திமுக மாமன்ற உறுப்பினரான செல்வராஜை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்துள்ளார்.
அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செல்வராஜ் தனது முதல் மனைவியான மல்லிகாவின் குடும்ப தேவைக்காக முத்துமாரியிடம் 2.5லட்சம் ரூபாய் மற்றும் 4பவுன் தங்க நகையை பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தருவதாக கூறி பத்திரத்தில் எழுதிகொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தனது பணம் மற்றும் நகையை தருமாறு செல்வராஜின் மல்லிகா மற்றும் அவரது மகனான சுப்பிரமணி ஆகிய இருவரிடமும் முத்துமாரி கேட்டபோது பணத்தை திரும்ப தரமுடியாது என கூறியதோடு , கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி முத்துமாரி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்நிலையில் காவல்துறையினர் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முத்துமாரி இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
காலில் யானைக்கால் நோய் பாதிப்பு உள்ள நிலையில் சிகிச்சைக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுப்பவர்கள் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.