• Wed. Oct 4th, 2023

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 20, 2022

ஆந்திரா சிக்கன் வறுவல்:

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:

தனியா - 1½ தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு -1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி ஏலக்காய் - 3 கிராம்பு - 4 பட்டை - சிறிய துண்டு காய்ந்த மிளகாய் - 6 காஷ்மீரி மிளகாய் - 4 

கொடுத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும், வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ பெரிய வெங்காயம் – 4 பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்பு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி அதில் சேர்த்துக் கிளறவும். அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து அந்தக் கலவையில் ஊற வைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கவும். கலவையில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, சிக்கனில் ஏற்கனவே உப்பு போட்டு ஊற வைத்திருப்பதால், சுவைத்துப் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும். ருசியான ஆந்திரா சிக்கன் வறுவல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *