• Wed. Apr 24th, 2024

ஏ.ஆர்.ரகுமான் மீது போலீசில் புகார்

தமிழன்னை குறித்து இழிவாக வரையப்பட்ட படத்தினை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ. ஆர்.

ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் நிர்வாகியான முத்து ரமேஷ் நாடார் சென்னையில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வழியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.அந்த புகாரில், ”உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழன்னைக்கு கோவில் கட்டி சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழ் அறிஞர்கள் பலர் தமிழன்னையின் படங்களை அழகாக தெய்வமாக வெளியிட்டுள்ளனர். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நூல்கள் தமிழர்களின் கரங்களில் செங்கோல்களாக காட்சியளிக்கின்றன.

ஆனால் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தலைவிரி கோலத்துடன் தமிழன்னை இருப்பது போன்ற படத்தினை தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற தமிழர்களை கொச்சைப் படுத்துகின்ற செயலாகும். ஆகவே தமிழர்கள் தெய்வமாக வழிபடும் தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும். அதுதான் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வழி. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டை முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடெங்கிலும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்தி மொழியை இந்தியாவில் இணைப்பு மொழியாக வேண்டும் என அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதை தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் ஏ. ஆர். ரகுமான் பற்றிதான் பரபரப்பான பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்த புகார் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *