தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ‘அதிமுகவிற்கு தலைமை மாற்றம் தேவை’ எனவும், ‘சசிகலா, அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும்’ எனவும் சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அந்த வகையில், மதுரை மாநகரிலும் அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை முனிஸ் என்ற அதிமுக தொண்டர் ஒட்டியுள்ள சுவரொட்டியில், “போதும் போதும் தோற்றது போதும்; தலைமை ஏற்க வா தாயே.
அதிமுகவினை அழிய விடாதீங்க தாயே; புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி கட்டிக்காத்த நம் கழகத்தை ஒருங்கிணைத்து காக்க வாருங்கள் தாயே; சின்னம்மா உங்கள் வார்த்தைக்காக கோடிக்கணக்கான அதிமுகவினர் காத்திருக்கிறோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் புலி வருது புலி வருது கதை போல தான் சசிகலா அவ்வப்போது எட்டி பார்த்து விட்டு அதிமுகவை நாம் தான் கைப்பற்ற போகிறோம் என்று கூறிவிட்டு மறைந்துவிடுகிறார். தொண்டர்களோ இந்த கட்சியில் இருக்கலாமா …வேண்டாமா என்று யோசித்து வருகின்றனர்.

