

மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை ஆவினில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை செலவினங்களில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தணிக்கை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. தணிக்கை அறிக்கையின் படி, 2016 – 2017ஆம் ஆண்டில் பால் தூளை, கால்நடை தீவன கிடங்கிற்கு தனியார் வாகனம் மூலமாக கொண்டு செல்லப்பட்டதற்கான வாடகையாக 6.81,950 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு 3 ட்ராலிகள் வழங்கப்பட்டதற்கான இழப்பு 5 லட்சத்து 21 ஆயிரம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2017 – 2018ஆம் ஆண்டில், பால் டப்பா சுத்தம் செய்தல், பால் கேன் மூடியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி 1 கோடியே 20 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, திருப்பதிக்கு நெய் விற்பனை செய்யப்பட்டதில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 18 வகையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விசாரிக்க மதுரை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணப்பெருமாள் கொண்ட மாவட்ட ஆய்வுக்குழுவை, மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் நியமித்துள்ளார். 15 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
