• Wed. Apr 24th, 2024

இலை இல்லாமல் மலரும் தாமரை.. அப்செட்டில் எடப்பாடி

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து அதிமுக இன்னமும் மீள முடியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவுக்குள் சில மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துள்ளது, அக்கட்சி தலைமையை ரொம்பவே உலுக்கி எடுத்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் ரிசல்ட் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை.. திமுகவின் வெற்றியாக இருந்தாலும் சரி, அதிமுகவின் தோல்வியாக இருந்தாலும் சரி.
இதுவரை வெற்றி பெறாத அதிமுகவின் கோட்டைகளை எல்லாம் திமுக வென்றெடுத்துள்ளது. இந்த தேர்தல் திமுகவின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சொந்த தொகுதிகளில் மண்ணை கவ்வியது அதிமுகவின் படுதோல்வியாக பார்க்கப்படுகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றவில்லை.. இதைதவிர தங்களின் வலிமைமிக்க கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட கோட்டைகளில், பலம் வாய்ந்த அதிமுகவின் வேட்பாளர்களே டெபாசிட் இழந்துள்ளனர்.. இந்த அதிர்ச்சியில் இருந்து அதிமுகவினர் மீளவே இல்லை.

3 விதமான முடிவுகளை பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஒன்று, அதிமுகவிற்கு வேறு தலைமை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.. “கட்சியின் பொதுக் குழுவை கூட்டுங்கள், தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்” என்று சில மாநில நிர்வாகிகள் பலரும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழுத்தம் கொடுக்க துவங்கி விட்டார்களாம். உள்ளாட்சியில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் தலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற விவாதத்தையும் இது தற்போது உருவாக்கி வருகிறது.

அதேபோல, சில அதிமுகவின் மூத்த தலைவர்களும் “ஒற்றை தலைமை” தான் கட்சிக்கு சரியாக இருக்கும் என்கிற விமர்சனத்தை துவக்கியிருக்கிறார்கள்… இந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்டு எடப்பாடி தரப்பு அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.. இதைபற்றி முக்கிய மாஜிக்களிடமும் மனம் விட்டு பேசி வருகிறாராம்.. ஆனால் மாஜிக்கள் தரப்பே, ஜெயக்குமார் கைதுக்கு பிறகு இடிந்து போய் உட்கார்ந்து விட்டதாம்.

இரண்டாவதாக, சசிகலா தலைமையேற்க வந்தே ஆக வேண்டும் என்பதை அதிகமாகவே உணர்ந்து வருகின்றனர்.. சில மூத்த தலைவர்கள் கூட “ஒற்றை தலைமை” தான் கட்சிக்கு சரியாக இருக்கும் என்கிற விமர்சனத்தை துவக்கியிருக்கிறார்கள்… இந்த 5 வருட காலமும் இரட்டை தலைமை என்ற விஷயத்தை நம்பிதான் கட்சியை கோட்டை விட்டுவிட்டோம், இனியும் ஈகோவை காட்டிக் கொண்டிருந்தால், இருக்கும் தொண்டர் பலத்தையும் இழந்துவிட வேண்டியதுதான் என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளது.

அதேபோல, சசிகலா அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்று சென்னை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சிலர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.. இதுவாவது, பரவாயில்லை, மதுரையில் தொண்டர்கள் நொந்து போய் உள்ளனராம்.. “தோற்றது போதும்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்ட அதிமுகவை, தோல்வியில் இருந்து மீட்க தலைமையேற்க வாருங்கள் தாயே” என்று ஓபனாகவே கோரிக்கை வைத்து அழைப்பு விடுக்க துவங்கி விட்டனர்.
மூன்றாவதாக, அதிமுகவில் உள்ள பெரும்பான்மையான சமூகத்தினர் பாஜக பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட்டிலேயே இது வெளிப்பட்டுள்ளது.. கூட்டணியில் பாஜக இருந்தவரை பாஜகவில் இருந்த மெஜாரிட்டியான பிராமண சமூகத்தினரும் வித்தியாசம் பாராமல் அதிமுகவுக்கு வாக்களித்து வந்தனர்.. இப்போது கூட்டணியை அதிமுக தவிர்த்ததால், பாஜகவில் உள்ள பிராமணர் சமுதாய மட்டுமல்லாமல், அதிமுகவில் உள்ள பிராமணர் சமுதாயமும், பாஜகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த 3 விஷயங்களில் எது நடந்தாலும் அது அதிமுகவை நேரடியாகவே பாதிக்கும் செயலாகவே கருதப்படும்.. அப்படி நடந்தால் அது கட்சியின் அஸ்திவாரத்தையே உலுக்கி எடுத்ததுவிடும் போலாகிவிடும்.. ஏற்கனவே கொங்கு மற்றும் தென் மாவட்டங்கள் என்ற ரீதியில், அதாவது கவுண்டர் மற்றும் தேவர் சமுதாய ரீதியில் கட்சி 2 ஆக பார்க்கப்பட்டு வருகிறது.. இதுதான் கடந்த சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கும் ஒரு காரணமாக இருந்தது.
எம்பி தேர்தலுக்கு தேசிய அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்து, மேலிடம் முடிவு செய்தால் மட்டுமே ஓரளவு தவிர்க்க முடியும்.. பிறகு கட்சியையும் பலப்படுத்த முடியும்.. சோர்வடைந்து போயுள்ள தொண்டர்களையும் ஊக்கப்படுத்த முடியும்.. இல்லாவிட்டால், அதிமுக என்ற ஆலமரம், சாதி கட்சி என்ற குடுவைக்குள் சிக்கி கொள்ள நேரிடும் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *