75 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .நாடு விடுதலை அடைந்தபிறகு கோடைகாலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 95அடிக்கு மேல் இருக்கும் போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்தநிலையில் இந்தாண்டு தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மே 24ம்தேதி (இன்று) டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். . இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.மதகுகளிலிருந்து நீர் வெளியேறியபோது மலர் தூவி வரவேற்றார் முதல்வர்.
முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
