நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
வருகிற 26-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோடி வருகையையொட்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டனர். அவர்கள் சென்னை விமான நிலையம் பிரதமரின் சாலைமார்க்க பயண வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மோடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இரவு 7 மணி வரை நடைபெறும் விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக இரவு 7.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடையும் மோடி அங்கிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றடைகிறார்.
பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகை
