• Fri. Mar 29th, 2024

சென்னை மெரினா கடற்கரை அலைகளில் சிக்குபவர்களை மீட்க செயல்பாட்டுக்கு வந்த ஒருங்கிணைந்த அவசர உதவி மையம்..!

Byவிஷா

Oct 12, 2021

கடந்த மாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சுமார் 13 பேர் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரை பகுதியில் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.


இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர், மனித உயிர்களை காக்கும் பொருட்டு அவசர உதவி மையம் செயல்படுத்துவதற்கு முடிவு செய்தனர். அதன்படி தற்போது ஒருங்கிணைந்த அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் 24 மணி நேரமும் 25 வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர அலையில் யாராவது சிக்கி கொண்டால் அது தொடர்பான தகவல்களும் பரிமாறப்பட்டு கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட துறைகளும் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகு மூலம் மீட்புப் பணியில் ஈடுபடுவது நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், தனித்தனியாக செயல்படும் இந்த துறைகளை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் தகவல் கொடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி போலீசார் அவசர உதவி மையம் ஒன்றை துவங்கியுள்ளனர். “மீட்பு பணியில் ஈடுபடும், தீயணைப்புத்துறை கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை காவல்துறை ஆழ்கடல் நீச்சல் தெரிந்த மீனவர்கள் என பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அலையில் சிக்கிக் கொள்பவர்கள் தொடர்பான தகவலை திருவல்லிக்கேணி போலீசாருக்கு 94981 00024 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அளித்தால், அவசர உதவி மையத்தில் உள்ள காவலர்கள் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னர் மீட்புபணி வாட்ஸ்அப் குழுவில் அந்த தகவலை பரிமாறுவார்கள், ஒரே நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபடும் அனைத்து துறைகளுக்கும் தகவல் கொடுக்கப்படுவதால் உடனடியாக மீட்புப் பணி நடைபெற்று அலையில் சிக்கும் நபரை உயிருடன் மீட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது” என திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *