

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்-நிலா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று கார்த்திக் உறவினரின் காதணி விழாவிற்காக சென்ற நிலையில் மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீடு முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டு வீட்டின் உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குடும்பத் தகராறு காரணமாக உறவினர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் கல், கட்டை போன்றவற்றால் வீட்டில் கதவை ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உடைக்கபட்டது தெரிந்தது.
ஏற்கனவே உறவினர்களுக்கும் கார்த்திக் குடும்பத்தினருக்கும் நிலத் தகராறு உள்ளதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார்த்திக் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக வீட்டின் உரிமையாளர் இல்லாதபோது உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

