

பெற வேண்டிய உரிமையை போராடி பெற வேண்டும். உங்கள் பையில் இருந்து எடுத்து கொடுத்து போக்குவரத்து நிர்வாகத்தை சோம்பேறியாக்க வேண்டாம் என உசிலம்பட்டியில் திமுக தொ.மு.ச பொதுச்செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உசிலம்பட்டி திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா படிப்பகத்தை தொ.மு.ச மதுரை மண்டல பொதுச் செயலாளர் அல்போன்ஸ், உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, ஜெயச்சந்திரன், சுதாகரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளுடன் இணைந்து திறந்து வைத்தார்.

தொடர்ந்து தொழிலாளர் நலன் சார்ந்தும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசிய மதுரை மண்டல செயலாளர் அல்போன்ஸ் உசிலம்பட்டி போக்குவரத்து கிளையில் உள்ள ஓய்வறையில் டிவி, உணவகத்திற்கு ஒலிபெருக்கி நிர்வாகிகள் சார்பில், வழங்குவது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் தொழிலாளர்களுக்கான உரிமையை போராடி பெற வேண்டுமே தவிர, உங்கள் பைகளில் இருந்து எடுத்துக் கொடுக்க கூடாது என்றும், பேருந்துகளில் ஒரு பல்பு எரியவில்லை என்றாலும் கோரிக்கை வைக்க வேண்டும். சரி செய்யவில்லை என்றால் போராடி பெற வேண்டுமே தவிர, இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என கண்டிப்புடன் வேண்டுகோள் விடுத்தார். ஆளும் திமுகவின் தொமுச தொழிற்சங்க மதுரை மண்டல பொதுச்செயலாளரின் இந்த பேச்சு உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

