கடுமையான காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா என உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை கேட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு என்பது ஒவ்வொரு வருடமும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை. இந்நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்தப்பின்னர் தலைமை நீதிபதி “தற்பொழுது நாங்கள் வீட்டிற்கு உள்ளேயும் முகக் கவசம் அறிந்திருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.. நிலமை மிகவும் அபாயகரமாக உள்ளது. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இந்த காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகளை மட்டும் குறை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

டெல்லியில் வாகன போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாடு மற்றும் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவு ஆகியவற்றை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்? காற்று மாசுபாட்டை குறைப்பது, எந்த அரசுடைய வேலை என்பதை நாங்கள் பார்க்கப் போவதில்லை. மாறாக இதனை எப்படி குறைக்க போகிறீர்கள், என்னென்ன வழிமுறைகள் மூலம் குறைக்க போகிறீர்கள் என்பதுதான் எங்களுக்கு தேவை. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை குறைப்பதற்கு அரசுகளிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” எனக் கேட்டார்.
அமர்வில் இருந்த இன்னொரு நீதிபதியான சந்திரசூட், “பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கு இன்று தனியாக எந்திரங்கள் இருப்பதாக கூறுகிறீர்கள்? ஆனால், அவற்றை வாங்க கூடிய நிலைமையில் விவசாயிகள் இல்லை. இதனை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளிடம் ஏன் கொடுக்கக்கூடாது? இல்லையென்றால், பயிர்க் கழிவுகளை நேரடியாக அரசே வாங்கி அதனை ஏன் அகற்றக்கூடாது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “2 லட்சம் எந்திரங்கள் 80% மானியத்துடன் வழங்குவதற்கு தயாராக உள்ளது” என கூறினார். அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “நாங்களும் விவசாய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான். எங்களுக்கும் அது எவ்வளவு செலவாகிறது என்பது தெரியும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக எந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என கூறுகிறீர்கள்… அப்படி எத்தனை சங்கங்கள் செயல்படுகிறது, எவ்வளவு எந்திரங்கள் இலவசமாக வழங்கப் பட்டிருக்கிறது என்பதை கூற முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பதில்கள் கூறப்பட்டன. இருப்பினும் எந்த பதிலிலும் திருப்தி அடையாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “உடனடியாக காற்றின் தரத்தை புள்ளிகளாக குறைப்பதற்கு செய்ய வேண்டிய திட்டம் என்ன? வேண்டுமென்றால் இரண்டு தினங்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா? தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் இந்த காற்று மாசுபாட்டினால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்.
அடுத்த இரண்டு மூன்று தினங்களுக்கு மேலும் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவசர கால முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் அரசுகள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை அரசுகள் மற்றும் அரசியலைத் தாண்டி பார்க்க வேண்டியதிருக்கிறது” என கூறினர்.
மேலும் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும், அதற்குள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது உள்ளிட்ட விஷயங்களை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்றும் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது, அலுவலகங்களுக்கான நேரத்தை குறைப்பது உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. காற்றின் தரத்தை மேம்படுத்த இரு தினங்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை டெல்லி அரசு எடுத்துள்ளது. வரும் வாரம் முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் தங்களுடைய இல்லங்களிலிருந்து ஆன்லைன் முறையில் வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 17ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்லாமல் தங்களுடைய இல்லங்களிலிருந்து “வொர்க் ஃப்ரம் ஹோம்” முறையில் பணிகளை தொடரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.