ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமம் நாகாச்சிதேவன் நகரைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவர்மீது அடிதடி வழக்கு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் தகராறு செய்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் அவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தேடினர்.
காவல்துறையினர் தேடி வரும் தகவல் அறிந்த மாரீஸ்வரன் திருப்பூருக்கு தப்பி ஓடினார். நேற்று முந்தினம் உச்சிப்புளி பகுதியில் சுற்றித்திரிந்த மாரீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
இதில் கால் முறிவு ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்காக நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மாரீஸ்வரன் தப்பினார். மாரீஸ்வரனை தப்பிக்க விட்ட காவலர்கள் ராமமூர்த்தி, தாமோதரனை ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கால் முறிந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாரீஸ்வரன் மருத்துவமனையிலிருந்து தப்பித்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.