டெல்லி ரயில் நிலையத்தில் இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சக்கர நாற்காலிக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த சுமை தூக்கும் தொழிலாளியின் (போர்ட்டர்) உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன் ஆக்ரா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் 21ம் தேதி வந்தார். அங்கு சுமை தூக்கும் தொழிலாளி உதவியுடன் தன் தந்தையை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி சேவையை பயன்படுத்தினார். இதற்கு சுமை தூக்கும் தொழிலாளி ரூ.10,000 வேண்டும் என கேட்டு பெற்றுள்ளார்.
பின்னர் இத்தகவலை ஆக்ரா செல்லும் போது அங்குள்ள ஆட்டோ டிரைவர் சங்க செயலாளரிடம் பாயல் கூறியுள்ளார். ‘‘ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.500 மட்டும் முன்பணம் செலுத்தி, சக்கர நாற்காலியை திரும்ப ஒப்படைக்கும் போது, அத்தொகையை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாயல், இச்சம்பவம் பற்றி டெல்லி ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து ஏமாற்றி பணம் பறித்த சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை திரும்ப பெற்று பாயலிடம் அளித்தனர். ரயில் பயணியை ஏமாற்றி பணம் பறித்த சுமை தூக்கும் தொழிலாளியின் உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.