
பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றிய “கில்லாடி” இளைஞரை முதல் மனைவி கொடுத்த புகாரில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த “செளந்தர்யா” என்ற பெண்ணிற்கும் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த “தினேஷ்(27)” என்ற இளைஞரும் 5வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணமாகி ஈரோட்டில் சில மாதங்கள் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவ்வபோது பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். முதல் மனைவியான சௌந்தர்யாவிற்கு 3வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு சென்ற “தினேஷ்” கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த போது, அங்கு ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தினேஷ் அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து மீண்டும் பெரம்பலூர் வந்த “தினேஷ்” மீண்டும் முதல் மனைவி சௌந்தர்யாவிடம் சில காலங்கள் வாழ்ந்ததாகவும் , மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினேஷ் சௌந்தர்யாவை விவாகரத்து செய்யும் முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது .
கை குழந்தை இருப்பதால் முதல் மனைவி சௌந்தர்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த “தினேஷ் சௌந்தர்யாவிற்கு கொலை மிரட்டல்” விடுத்து பிரிந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் பெரம்பலூரில் மினி பேருந்து ஓட்டுநராக சில காலம் வேலை பார்த்த தினேஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3வதாக பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து அதனை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் “I LOVE YOU MY பொண்டாட்டி” என பதிவிட்டுள்ளார்.
இதனை அறிந்த முதல் மனைவி சௌந்தர்யா தினேஷை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். ஆனால் தினேஷ் இன்ஸ்டாகிராமில் தான் பதிவிட்ட போட்டோகளை நீக்கியதாகவும், தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது மனைவியை அடையாளம் கண்ட முதல் மனைவி அவரை தொடர்பு கொண்டு தினேஷை வரவழைத்து தினேஷ் மீது பெரம்பலூர் “அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்” “என்னை ஏற்கனவே திருமணம் செய்து விட்டு தன் கணவர் வேற 2 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக” சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் தினேஷை கைது செய்துள்ள மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தினேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பெண்களையும் காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி இளைஞர் தினேஷ் “ஏற்கனவே கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையானவர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்” என பாதிக்கப்பட்ட முதல் மனைவி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
