• Fri. Apr 26th, 2024

உடல்நலக்குறைவால் காலமானார் ’புத்தக தாத்தா’

Byமதி

Dec 4, 2021

பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து ‘புத்தக தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன்(81) நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நலக்குறைவால் காலமானார்.

பழைய பேப்பர், பத்திரிகை வியாபாரம் செய்த போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்னர் அதுவே வாழ்வாகி போனது அவருக்கு. படிப்பு வாசனையே அறியாத முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். 25 ஆயிரம் அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்லமுடியும். சுமார் 35 வருடங்களாக புத்தகங்களை சுமந்து திரிந்தவர் முருகேசன், தென் மாவட்ட ஆய்வு மாணவர்களுக்கு கைடு.

‘‘தாத்தா… இந்தத் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்’’ என்று சொன்னால் போதுமாம், அது தொடர்பான எல்லா புத்தகத்தையும் கொண்டுவந்து விடுவாராம். தேவை தீர்ந்ததும் மீண்டும் சேகரித்துக் கொள்வாராம். ஆனால் இதற்கு கட்டணம் ஏதும் வசூலித்தது இல்லையாம். மாணவர்களாக விரும்பி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வாராம் தமிழுக்கு தான் செய்வது மிகப்பெரிய சேவை என்பது தெரியாமலே செய்து கொண்டிருந்த இவர், நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நல குறைவால் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *