• Wed. Apr 24th, 2024

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் அழகிய தோற்றம்!

உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக தலச்சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு! மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது.

தல வரலாறு : ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட அவ்வுடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. நான்முகன் அதைக் கண்டார். நீரும் அவ்வுடல் அற்ற தசைகளும் ஒன்றாக ஈறுகி மண்ணுலகம் தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் ஒரு மலை வடிவாகத் தோன்றி எதிர் நின்றார். மலரவன் அதனை அறியாது வேறு பல மலைகளைப் படைத்தார். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லை. பெரிதும் வருந்தி மயங்கி நின்றார். பிரணவ கடவுள் தோன்றிக் குறிப்பால் உண்மையை உணர்த்தினார். நான்முகன் நல்லறிவு பெற்று உடனே மலை வடிவாய் நின்ற சிவபெருமானை வழிபட்டுப் பூஜித்தார்.

சிவபெருமான், மேதையும் (தசையும்) நீரும் ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். மலரவன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். மலரவனை நோக்கி, ஏ அறிவிலி! நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம். நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலில், நம் மலைக்குப் பழமலை என்றே பெயர் வழங்குவதாகுக. மற்றும், இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிப்பட்டோர் எவரும் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர் என்று அருள் செய்து மறைந்தருளினார் என்பர்.

கல்வெட்டுக்களில் இருக்கும் அரசர்களின் பெயர்கள் : பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், இராஜாஜி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன், கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி முதலியவையாம்.

மூலவர் – விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர், முதுகுந்தர்.

அம்பாள் – விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை, இளைய நாயகி.

தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்.

நடைதிறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *