• Thu. Apr 25th, 2024

ஒரு குடும்பம் இணைந்து உருவாக்கிய எழில் மிகு மூங்கில் வீடு! செலவு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே

ஒரு குடும்பம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் தாங்களாகவே உருவாக்கிய மூங்கில் வீடு காண்போரை கவர்வதாக அமைந்துள்ளது. ஆச்சர்யத்துடன் பார்த்த்துச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

இடுக்கி மாவட்டம் அச்சன்கோவிலைச் சேர்ந்தவர் ரதீஷ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவி சவிதா. அஷ்னு, அர்ஜுன் என இரண்டு குழந்தைகள். கணவனும் மனைவியும் அன்றாடம் ஏலக்காய் தோட்டம் உள்ளிட்ட கூலித்தொழிலுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து கடந்த 7 மாதங்களுக்கு முன் 20 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளனர்.

    

மனைவி சவிதாவிற்கு சொந்த வீட்டில் வாழ்வதற்கு ஆசையாக இருந்துள்ளது. ஆனால் லட்சங்கள் வேண்டும் சொந்த வீடு கட்ட என உணர்ந்த கணவர் ரதீஷிற்கு, சுற்றுலா தலங்களில் கண்ட மூங்கில் வீடு நினைவிற்கு வந்தது. மூங்கீல் வீட்டிற்கு ,மனைவியும் குழந்தைகளும் ஒப்புக்கொள்ள, குறைந்த செலவில் அதுவும் 20 ஆயிரம் ரூபாய்க்குள் முழுக்க முழுக்க மூங்கில்களால் மட்ட்டுமே ஆன மூங்கில் வீடு தயாரானது.

இதற்காக 170 மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டன. மூங்கில்கள் கொண்டு வருவதற்காக வண்டி வாடகை, மேற்கூரைக்கான “ஷீட்” ஆகியன மட்டுமே அந்த 20 ஆயிரம் ரூபாய் செலவு. மற்றபடி கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பமே உழைப்பை கொட்ட, 17 நாட்களில் தயாரானது இந்த மூங்கில் வீடு.

வீட்டினுள் ஒரு படுக்கை அறை உள்ளிட்ட மூன்று அறைகள். வீட்டினுள் கட்டிலும், இருக்கைகளும் கூட மூங்கில்களால் தான். முற்றத்து பூந்தொட்டிகளும் மூங்கில்களால் உருவாகி இருக்கின்றன. குளுமை தரும் மூங்கில்களால் ஒருவான இந்த “குளு குளு” மூங்கில் வீடு ஏலத்தோட்டங்களின் பின்னணியில் அமைந்திருப்பது அழகிற்கு அழகு சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அது காண்போரை கவர்வதோடு, ஆச்சர்யப்படவும் வைக்கிறது.

மனைவியின் சொந்த வீட்டு ஆசை 20 ஆயிரம் ரூபாயில் நிறைவேறிய பூரிப்பில் பேசும் ரதீஷ், அச்சன்கோவில் பகுதிகளில் கண்ட வீடுகளைக் கொண்டு தான் இதை கட்ட தீர்மானித்ததாகவும் குடும்பமே முழு ஒத்துழைப்பு நல்கியதால் வீடு அழகாக உருவாகியதாகவும் தெரிவிக்கிறார்.

சிறியதோ, பெரியதோ, அதிக செலவோ, குறைந்த செலவோ… மனைவியின் ஆசையை நிறைவேற்றியதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு இணை எதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *