• Fri. Oct 30th, 2026

அஞ்சல் முத்திரைகள் மூலம் தமிழகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்!

ByKalamegam Viswanathan

Oct 30, 2026

தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகச் சிறப்புகள் ஆகியவற்றை அஞ்சல் முத்திரைகள் வாயிலாக அறிந்துகொள்ளும் வகையில், இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Tamil Nadu Philately Passport Book’ பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.650 விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையடக்கப் புத்தகத்தில், தமிழகத்தின் பல்வேறு சிறப்புகளை எடுத்துரைக்கும் 58 சிறப்பு அஞ்சல் முத்திரைகள் தொடர்பான படங்களும் அவற்றின் பின்னணித் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மதுரையில் புத்தகம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

அஞ்சல் தலை சேகரிப்புடன் தமிழக வரலாற்றையும் அறியலாம்!

அஞ்சல் தலை சேகரிப்பைக் குறிக்கும் ‘Philately’ என்பது வெறும் அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவற்றின் வரலாறு, வடிவமைப்பு, வெளியிடப்பட்ட காலம், தொடர்புடைய இடங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை அறிந்துகொள்ளும் அறிவார்ந்த செயல்பாடாகவும் விளங்குகிறது.
இந்த ஆர்வத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், தமிழகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் 58 அஞ்சல் முத்திரைகளை ஒரே புத்தகத்தில் தொகுத்து தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், ஆன்மிகத் தலங்கள், பாரம்பரிய அடையாளங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான தகவல்களை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் முத்திரைகளின் படங்கள், அவை வெளியிடப்பட்ட காலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விவரங்களை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

மதுரையில் 180 புத்தகங்கள் விறுவிறுப்பாக விற்பனை

மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முதுநிலை அஞ்சல் அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:
“தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முக்கிய அஞ்சலகங்களில் ‘Tamil Nadu Philately Passport Book’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் இந்தப் புத்தகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. வெளியிடப்பட்டதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

கையடக்க வடிவில் உள்ள இந்தப் புத்தகத்தில், தமிழகத்தில் வெளியிடப்பட்ட 58 சிறப்பு அஞ்சல் முத்திரைகளின் படங்களும் அவை தொடர்பான விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முத்திரையின் பின்னணியையும் அதன் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

மதுரையின் திருப்பரங்குன்றம், அழகர்கோவில் உள்ளிட்ட இடங்கள் தொடர்பான அஞ்சல் முத்திரைகளும், அறுபடை வீடுகளான முருகப்பெருமானின் ஆறு திருத்தலங்கள் தொடர்பான முத்திரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அந்தத் தலங்களின் சிறப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

மதுரை தலைமை அஞ்சலகத்திற்கு முதற்கட்டமாக 180 புத்தகங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. மேலும் தேவைப்படுவோருக்கு புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக உள்ளோம்” என்றார்.

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் வரவேற்பு

மதுரை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் முக்கிய நிர்வாகி சண்முகம் கூறியதாவது: “எனது பள்ளிப் பருவத்திலிருந்தே அஞ்சல் தலை சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ள இந்தப் ‘Philately Passport Book’ மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்படப் பலரும் ஆர்வத்துடன் வாங்குவது, அஞ்சல் தலை சேகரிப்பின் மீதான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள 58 சிறப்பு அஞ்சல் முத்திரைகள் தொடர்பான விவரங்கள், அவை வெளியிடப்பட்ட காலம் உள்ளிட்ட தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர்களின் மீன் கொடி போன்ற வரலாற்று அடையாளங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள தலைமை அஞ்சலகங்கள் அல்லது தொடர்புடைய அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் முத்திரைகளைப் பெற்று, அவற்றைப் புத்தகத்தில் சேகரித்துப் பாதுகாப்பது தனித்துவமான அனுபவமாக இருக்கும். அஞ்சல் தலை சேகரிப்பையும் சுற்றுலாவையும் இணைக்கும் இந்த முயற்சி பலருக்கும் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தும்” என்றார்.

குழந்தைகளின் அறிவை வளர்க்கும் சிறந்த முதலீடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் மோனிகா கூறியதாவது:
“ரூ.650 விலையில் கிடைக்கும் இந்த அஞ்சல் முத்திரைப் பாஸ்போர்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு இடங்கள், அவற்றின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த தகவல்களை ஒரே புத்தகத்தில் அறிந்துகொள்ள முடிவது இதன் சிறப்பு.

குழந்தைகளின் கவனத்தை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் பக்கம் திருப்புவதற்கு அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். அஞ்சல் முத்திரைகளைச் சேகரிப்பதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, புதிய அனுபவங்களையும் அறிவையும் பெறுவார்கள். எனவே, குழந்தைகளின் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறந்த முதலீடாக இதைக் கருதலாம்” என்றார்.

பாரம்பரியத்தை அறியும் ஆர்வம் அதிகரிக்கும்

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அனாகிதா கூறியதாவது: “அஞ்சல் தலை சேகரிப்பு என்பது பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு அஞ்சல் தலையும் வெறும் காகிதம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் அறிவு, உணர்வு, படைப்பாற்றல் எனப் பல அம்சங்கள் உள்ளன.

மிகச் சிறிய அஞ்சல் முத்திரைகள்கூட நமது பாரம்பரியத்தைப் பற்றிப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. தமிழகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்தப் பாஸ்போர்ட் புத்தகம் கிடைத்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

மதுரையில் எங்கு கிடைக்கும்?

ரூ.650 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை சென்னை பொது அஞ்சல் அலுவலகம், அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்புப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மையங்களிலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொடர்புடைய அஞ்சல் தலை சேகரிப்புப் பிரிவுகளிலும் பெறுவதற்கான வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர்கள் மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்புப் பிரிவைத் தொடர்புகொண்டு புத்தகத்தின் இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

அஞ்சல் தலை சேகரிப்பை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் இந்த முயற்சி வழங்குகிறது. அஞ்சல் முத்திரைகளின் பின்னணியைத் தெரிந்துகொள்வது, அவை தொடர்புடைய இடங்களை நேரில் பார்வையிடுவது என அறிவையும் பயண அனுபவத்தையும் இணைக்கும் புதிய முயற்சியாக ‘Tamil Nadu Philately Passport Book’ அமைந்துள்ளது.