மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவணி மூல திருவிழா ஆகஸ்ட் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 28ம் தேதி வரை நான்கு ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவர்.
அதனை தொடர்ந்து ஆக.29 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.
ஆக.29 ஆவணி மூல உற்சவ முதல் திருநாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆக.30 – நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆக.31 – மாணிக்கம் விற்றல், செப்.1 – தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்.2 – உலவாக்கோட்டை அருளியது, செப்.3 – பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்.4 – வளையல் விற்றல், செப்.5 – நரியை பரியாக்கியது, செப்.6 – பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்.7 – விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும் வழக்கத்தின் அடிப்படையில் செப்.4 ஆம் தேதியன்று இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும்.
செப்.6 ஆம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு பிட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு 9:30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைவர்.
அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 – 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் கண்டு களிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.