• Fri. Dec 13th, 2024

ஆடி அமாவாசை:
சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி

Byவிஷா

Jul 23, 2022

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 2 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். பிரதி தமிழ் மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் 25ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக இரண்டு நாட்கள் என மொத்தம் 6 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டிருப்பது, சதுரகிரி செல்லும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.