நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வசித்து வரும் பாட்டி பாப்பா. 85 வயதான இவர், நூறு அடி கிணற்றில் அசால்ட்டாக டைவ் அடித்தும், அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தும் வருகிறார்.
இதுகுறித்து அந்த பாட்டி கூறுகையில், தன்னுடைய அப்பாவிடமிருந்து அனைத்துவகை நீச்சலும் தான் கற்றுக் கொண்டதாகவும் இந்த தள்ளாத வயதிலும் இந்த கலையை இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்து வருவதாகவும், முன்பு போல் அதிகமாக கற்றுத்தர முடியவில்லை என்றாலும் இந்த வயதில் என்னால் முடிந்தவரை இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் நீச்சல் கற்று தந்து வருகின்றேன்.

என்னுடைய மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்த இந்த பகுதிவாழ் மக்கள் தங்களுக்கு இந்த கலையை கற்றுக் கொடுக்க வற்புறுத்தியதால் தற்போது இந்தக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறேன். நீச்சல் கலை என்பது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த தள்ளாத வயதிலும் அனைவருக்கும் நீச்சல் கற்றுத் தருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
