தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம் என்றும், உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திப் பேசியிருப்பதுதான் ஹைலைட்டே!
மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட தொழில்நுட்ப அணி சார்பில் ஆடவர் மற்றம் மகளிருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் 2ம் நாள் விளையாட்டு போட்டியை பார்க்க வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்,
மகளிருக்கான அரையிறுதி போட்டியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
“விளையாட்டு வீரர்கள் நிறைந்த மண் தமிழ்நாடு. விரைவில் தமிழகம் எங்கும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை மாநில அளவில் கொண்டுவந்து பயிற்சி அளித்து, தேசிய, சர்வதேச அளவில் அவர்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்க உள்ளோம். விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்திட வேண்டும். 100 சதவீத எனர்ஜி நமக்கு அதிகாலை வேளையில்தான் உள்ளது. உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.