



பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் மார்ச் 15 அன்று நடைபெற்றது.

இந்த திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் மிக பிரம்மாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்க வைக்கும். ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது
இதன்படி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

