• Wed. Apr 23rd, 2025

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது- மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி!

ByP.Kavitha Kumar

Mar 24, 2025

திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு சொந்தமானது என்று தொல்லியல் துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதில், “திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க கோரியும், திருப்பரங்குன்ற மலையை சமணர் குன்றுமலை என அறிவிக்கக்கூடிய மனுவும், இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்; சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது” என பல்வேறு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், ‘ திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள 18-ம் படி கருப்பசாமி திருக்கோயில், பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பிற கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது. ஒற்றுமையே பலம் என்பதால் தமிழ்நாடு அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது.

அதன் அடிப்படையில் ஜனவரி 30-ம் தேதி இரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் ஒரு மனதாக முடிவு செய்து தெரிவித்தனர். அத்துடன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தொல்லியல்துறை தரப்பில், வழக்குத் தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் எழுந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொல்லியல்துறை தரப்பில் ஏற்க மறுத்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மனுதாரர்கள் தரப்பில், இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பிரைவசி கவுன்சில் உறுதி செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர். மேலும் ‘தொல்லியல் துறை மலை தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது’ என்று தெரிவித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி, தொடர்ந்து, தொல்லியல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.