• Fri. Mar 29th, 2024

ஹெலிகாப்டர் விபத்து விவகாரம் யூகங்களை தவிர்க்கவும் .., விமானப்படை வேண்டுகோள்!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் தேவையில்லாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களது உடல் குன்னூரிலிருந்து டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது.

இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லிடர் ஆகியோரது உடல்கள் மட்டுமே அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், மாநில முதல்வர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பிபின் ராவத் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லி ஆளுநர் அணில் பைஜெல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகளும் கருத்துகளும் இணையத்தில் பரவி வருகின்றன. குறிப்பாக அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹெலிகாப்டரில் இந்த விபத்து ஏற்பட்டது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த சூழலில் இன்று விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆராய முப்படையினரும் அடங்கிய விசாரணை மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும். அதுவரை உயிரிழந்தவர்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் யூகங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *