ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல், மற்ற நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகளின் உயிரிழப்புக்கு இந்தியா தேசமே கண்ணீர் வடிக்கிறது. ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள், அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் அனைவரும் வீரர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
தேசத்தின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி வழியாக வீரர்களின் உடல்களை சுமந்து கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வழி நெடுக காத்திருந்த மக்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இடங்களில் வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் வியாபார கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதேபோல சுற்றுலா தலங்களுக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் நீலகிரியில் தெருக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.